உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு மாயமான மாணவிகள் - சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு

Published On 2025-04-16 11:07 IST   |   Update On 2025-04-16 11:07:00 IST
  • மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
  • சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

திருச்சி:

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத் தேர்வினை நேற்று மாணவ-மாணவிகள் எழுதினர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாலையில் வீடு திரும்பவில்லை.

இரவு 8 மணி ஆகியும் அந்த மாணவிகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளியில் விசாரித்த போது, தேர்வு எழுதிவிட்டு மதியமே தேர்வு மையத்திலிருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்களது தோழிகளிடம் விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த மாணவிகளின் பெற்றோர் பவானி போலீசில் புகார் செய்தனர்.

பின்னர் துணை போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.

இதில் 5 மாணவிகளும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே பவானி போலீசார் சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சென்று 5 மாணவிகளையும் மீட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் வெற்றி பெற பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். இதை தொடர்ந்து 5 பேரையும் ஈரோட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News