உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை பஸ் நிலைய அரசு விரைவு பஸ் முன்பதிவு அலுவலகத்தில் கோவை செல்லும் பஸ்களின் நேர அட்டவணையை படத்தில் காணலாம்.

கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தம்

Published On 2022-09-14 08:25 GMT   |   Update On 2022-09-14 08:25 GMT
  • தேவகோட்டையில் இருந்து கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் இயங்கவில்லை.
  • அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையானது முதன்மையான நகராட்சியாகும். இந்த நகரை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்காகவும், சென்னை, கோவை, பெங்களூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல பஸ் வசதிகளுக்காக வந்து செல்கின்றனர்.

மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக அதிக அளவில் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூர், கோவை போன்ற நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது.

குறிப்பாக கோவை செல்ல அரசு விரைவு பஸ்கள் காலையில் 2 பஸ்களும், இரவில் 2 பஸ்களும் இயங்கின. சில மாதங்களாக கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வேலைகளுக்கு செல்வோரும், மேற்படிப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை விட இப்போது 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், கோவை செல்ல குறைந்த செலவில் இந்த பகுதி கிராம மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் அரசு விரைவு பஸ்கள் பயன்பட்டது.

தற்போது அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாததால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தேவகோட்டை பஸ் நிலையம் உட்புறமுள்ள அரசு விரைவு பஸ்கள் முன்பதிவு அலுவலகத்தின் அட்டவணையில் கோவை செல்லும் பஸ்களில் நேரம் உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களுக்கு சாதகமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதன்மையான நகராட்சியில் இந்த அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News