உள்ளூர் செய்திகள்

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

Published On 2022-09-10 07:52 GMT   |   Update On 2022-09-10 07:52 GMT
  • குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
  • 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய அளவிலான குடற்புழு நீக்க நாள் 2-ம் சுற்று நேற்று கடைபிடிக்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு 16-ந் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைவருக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர) ''அல்பெண்டசோல்'' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 65 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கும், 20-30 வயது உள்ள 67 ஆயிரத்து 637 பெண்களுக்கும் மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவி களுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீடுகள் தோறும் சென்று இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.

இந்த முகாமில் 281 கிராம சுகாதார செவிலியர்கள், 17 ஆஷா பணியாளர்கள், 1,277 அங்கன்வாடி பணியாளர்கள், 1,510 பள்ளி மற்றும் கல்லூரி நோடல் ஆசிரியர்கள் மூலமாக அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

இந்த முகாமில் 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News