உள்ளூர் செய்திகள்

லாரியின் தார்ப்பாயை பிரித்து கரும்புகளை சுவைத்த ஒற்றை யானை

Published On 2025-09-06 10:24 IST   |   Update On 2025-09-06 10:24:00 IST
  • ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது.
  • விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்று அங்கு கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

சில சமயம் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவமும் நடந்து வருகிறது.

இதனால் லாரியில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் டிரைவர்கள் கரும்புகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக லாரி சுற்றிலும் தார்ப்பாயை போட்டு மூடி வருகின்றனர். இருந்தாலும் கரும்பின் வாசனையை பிடித்து அந்த லாரிகளை யானைகள் வழிமறிப்பது நடந்து வருகிறது.

நேற்று தாளவாடி அடுத்த அரேப்பாளையம் பிரிவில் ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி கரும்பு பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

கரும்பை சுற்றியும் வெள்ளை கலர் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. எனினும் கரும்பு வாசனையை பிடித்த அந்த ஒற்றை யானை அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி தார்பாயை தும்பிக்கையால் பிரித்து தூர எறிந்து கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு ருசித்தது.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு யானை அந்த இடத்தை விட்டு சென்றதும் போக்குவரத்து சீரானது.

இதேபோல் நேற்று இரவு தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்தது. அங்கு தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக இரவு நேர தூக்கத்தை தொலைத்து கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News