நெல்லையப்பர் சுவாமிக்கு செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி- இன்று இரவு நடக்கிறது
- நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
- பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞானசம்பந்த ரால் பாடல் பெற்ற தலமாகவும் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
பங்குனி உத்திர திருவிழா
அதன் ஒரு நிகழ்ச்சியாக பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா ஆண்டு தோறும் 10 நாட்கள் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி சுவாமி சன்னதி உள் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்ககொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மூலஸ்தானத்தில் இருக்கும் உடையவா் லிங்கம் வெளி வந்து காட்சி கொடுப்பதும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதும் இந்த திருவிழாவில்தான்.
செங்கோல் வழங்கும் வைபவம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வைபவம் இன்று இரவு காந்திமதி அம்பாள் கோவிலில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாநகரம் உருவானதும், சிவபெருமான் தன் சாா்பாக இந்த நகரத்தை ஆட்சி செய்யும் பொருட்டு தங்க செங்கோலும், வெள்ளி திருப்பாதுகையும் தன் மகனான முருகனிடம் கொடுத்து அதை பாண்டிய மன்னாிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவிளையாடல் ஆகும்.
அதன்படி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் சிறப்பு அலங்கா ரத்தில் வீற்றிருக்க பக்கத்தில் முருகப்பெருமானும், பாண்டிய மன்னனும் வணங்கி நிற்பார்கள். தொடா்ந்து கோவில் நிர்வாக அலுவலருக்கு செங்கோலும், உதவி ஆணையருக்கு சுவாமியின் திருப்பாதமும் வழங்கப்படும்.
இதனை நிர்வாக அலுவலர் தலைமையில் சுமந்து சுவாமி, அம்பாளை வலம் வந்து, பின்னர் தங்களிடம் வழங்கப்பட்ட பொறுப்பை திரும்ப சுவாமியிடமே ஓப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிறைவாக சுவாமி- அம்பாளுக்கு சோடச உபசரனைகள், நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தாிசனம் செய்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.