உள்ளூர் செய்திகள்

கடலூர் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடலூர் மாநகராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட வாய்க்கால் கட்டுமான பணிகள்: பருவமழைக்கு முன்பு முடிக்கப்படுமா?

Published On 2023-09-24 08:25 GMT   |   Update On 2023-09-24 08:25 GMT
  • அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது.
  • இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால்கள் இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடலூர் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலியாக உள்ள இடங்களில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும், மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News