அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துவேன்: சீமான்
- பொது சிவில் சட்டத்தால் எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை.
- தி.மு.க. மாநில சுயாட்சி பேசிய கட்சி.
தேனி :
தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது சிவில் சட்டத்தால் எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை. மணிப்பூரில் பிரதமர், முதல்-அமைச்சருக்கு தெரியாமல் கலவரம் நடக்கிறதா? காஷ்மீர், ஈழத்தில் என்ன நடந்ததோ, அதுதான் மணிப்பூரிலும் நடக்கிறது. மணிப்பூரில் நடக்கும் கலவரம் என்பது அங்குள்ள காடுகளில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு அங்குள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக நடத்தப்படுகிறது. என்னிடம் நாட்டை கொடுங்கள். அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்.
தி.மு.க. மாநில சுயாட்சி பேசிய கட்சி. ஆனால், இப்போது உயர் போலீஸ் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் என யாராவது ஒருவர் தமிழர் இருக்கிறாரா? இந்த பதவிகளை பொறுப்போடு நிர்வகிக்க ஒரு தகுதியுள்ள தமிழர் கூட இல்லையா? இனி நேரடியாக பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.