உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 3.62 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிப்பு: சத்யபிரதா சாகு

Published On 2022-11-30 02:00 GMT   |   Update On 2022-11-30 02:00 GMT
  • வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 15 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
  • மார்ச் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும்.

சென்னை :

வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் இறந்தவர் பெயர்களை நீக்குவது, ஒரே பெயர் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை சரி செய்வது, போலி வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி இப்பணிகள் தொடங்கின.

இதற்காக வாக்காளர்கள் இணையதள மூலமாக ஆதார் விவரங்களை இணைக்க விண்ணப்பிக்கலாம். வீடு, வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பப்படிவத்தை பெற்று அதன் வாயிலாகவும் இணைக்கலாம் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் முடிவடைகிறது. தமிழகத்தில் இதுவரை 58 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் நம்பரை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

தமிழகத்தில் மொத்தமுள்ள 6.18 கோடி வாக்காளர்களில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைப்பதற்காக 58.73 சதவீதம், அதாவது 3.62 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும் நிலையில், அதனுடன் சேர்த்து, ஆதார் விவரங்களும் பெறப்படுகின்றன. ஆதார் விவரங்கள், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 84.9 சதவீதமும், அரியலூரில் 84.3 சதவீதமும் பெறப்பட்டுள்ளன. சென்னை 22 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. 27 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். மார்ச் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். அதன்பின், ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்த விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிடும். அதன் பின்னர் அவை இணைக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 15 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தொகுதி ரீதியாக வாக்காளர்கள் பெயர் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை பெற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதார் விவரங்கள் சேகரித்தல், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News