உள்ளூர் செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் (கோப்பு படம்) 

சாத்தான்குளம் கொலை வழக்கு: தந்தை, மகன் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீசார்- முக்கிய சாட்சி பேட்டி

Published On 2022-11-04 12:26 GMT   |   Update On 2022-11-05 03:06 GMT
  • முகம் முழுவதும் ரத்த வழிய நடக்க முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.
  • காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய அடித்ததாக தெரிவித்தனர்.

துாத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விசாரணை நடைபெற்ற போது முக்கிய சாட்சியான ராஜாசிங் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 


இந்த சம்பவம் நடைபெற்ற போது நான் சிறையில் இருந்தேன். சாப்பிட செல்லும் போதுதான் அவர்களை நான் பார்த்தேன், இருவரும் நடக்க முடியாமல் இருந்தனர். முகம் முழுவதும் ரத்த வழிய அவர்கள் சோர்வாக இருந்தனர். அவர்களிடம் நான் கேட்ட போது சாத்தான்குளத்தில் வைத்து அடித்து விட்டதாக கூறினர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய காவல்துறையினர் அடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தேன்.

வேறு வழக்கு ஒன்றிற்காக என்னையும் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் மூன்று நாட்கள் வைத்து அடித்து சித்தரவதை செய்து கொடுமைப்படுத்தினர். மற்றொரு காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அடித்தனர். இதனால் எனது உடலில் படுகாயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். செய்யாத குற்றத்திற்காக என்னை சித்தரவதை செய்து கையெழுத்து வாங்கி சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News