சிதம்பர வேல்பிரகாஷ்.
கனடா நாட்டில் சாலை விபத்தில் சங்கரன்கோவில் வாலிபர் பலி
- சிதம்பர வேல்பிரகாஷ் கனடாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
- ரஞ்சித்துக்கு தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் சிதம்பர வேல்பிரகாஷ் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி காலை பிரகாஷ் சைக்கிளில் சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார். பிரகாஷ் உயிரிழந்த தகவல் தெரிந்ததும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். மேலும் இறந்த பிரகாஷின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே அவர் பணிபுரியும் நிறுவனம் அவருடைய சொந்தங்கள் யாராவது வந்தால் மட்டுமே விசா எடுக்க வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் குழந்தையை அனுப்ப முடியும் என்று கூறியுள்ளது. எனவே அவரது சகோதரர் ரஞ்சித் அங்கு செல்ல தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், பிரகாஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது உடலை இந்தியா கொண்டுவர முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.