ஏற்காடு அண்ணா பூங்கா, மாணவர் விடுதியில் சட்ட பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு
- பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் சேலம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
- சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் பொதுக்கணக்குகுழு ஆய்வு செய்கிறது.
சேலம்:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-24-ம் ஆண்டுக்கான பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் சேலம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
பொது கணக்கு குழு ஆய்வு
இந்த குழுவானது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதியினை ஆக்கப்பூர்வமாகவும், சிக்கன மாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதோடு நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையையும் உறுதி செய்கிறது. சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் பொதுக்கணக்குகுழு ஆய்வு செய்கிறது.
இதற்காக பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் நேற்றிரவு சேலம் வந்தனர். இந்த குழுவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், பாலாஜி, உதயசூரியன், கிருஷ்ணசாமி, சேகர், சரஸ்வதி ஆகியோர் இன்று ஏற்காடு வாழவந்தி புளியங்கடை பகுதியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வெண்ணெய் பழ சாகுபடி பரப்பு விரிவாக்கத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து ஏற்காடு பொன்னி ரேசன் கடைகள், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நல விடுதி , சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பேர்லேண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, அஸ்தம்பட்டி செரி ரோடு சாலையில் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே பாலம் கட்டும் பணி, சேலம் டவுன் மற்றும் கிழக்கு ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே சாலையில் மேம்பாலம் கட்டுதல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கலெக்டர் மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆய்வு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.