உள்ளூர் செய்திகள்

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன வசதிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் கவலை

Published On 2023-08-02 08:17 GMT   |   Update On 2023-08-02 08:17 GMT
  • கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.
  • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

மேட்டூர்:

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 -ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தென்மேற்கு பருவமழை

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதனால் முன்கூட்டியே மே மாதம் 24-ல் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கவில்லை இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

ஏமாற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும் போது கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது அணையில் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான நேற்று கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே கர்நாடகா அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நிலுவையில் உள்ள தண்ணீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்வாய் பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News