உள்ளூர் செய்திகள்

போலி உணவு பாதுகாப்பு அலுவலர்.

போலி உணவு பாதுகாப்பு அலுவலர் 10-க்கும் மேற்பட்டஇடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

Published On 2023-10-12 07:07 GMT   |   Update On 2023-10-12 07:07 GMT
  • மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.
  • நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் செட்டிமாங்குறிச்சி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

சோதனை

இந்த நிலையில் அண்மையில் குமாரின் மளிகை கடைக்கு டிப்-டாப்பாக உடை அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.

அப்போது அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார். இதை கண்ட அந்த நபர் கடைக்குள் இருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து உடைத்து குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி, கடையில் பணப்பெட்டியில் இருந்த ரொக்க பணம் ரூ.21 ஆயிரத்து 500 -ஐ கொள்ளை அடித்துக் கொண்டு தான் வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீசார் அப்பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மளிகை கடையில் கொள்ளை அடித்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

குமாரபாளையத்தை சேர்ந்தவர்

போலீசாரின் விசார ணையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பதும், இவர் மீது இதேபோன்று 13 -க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே தனது கூட்டாளியான அங்கப்பன் என்பவருடன் சேர்ந்து போலி அதிகாரியாக நடித்து பெருந்தொகையினை கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் தலைறைவாக இருந்து வருவதும், அவரை போலீசார் தேடி வருவதும் தெரியவந்தது.

கைது- ஜெயிலில் அடைப்பு

இந்த நிலையில் தான் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த குமாரின் மளிகை கடையில் மணிகண்டன் போலி அதிகாரியாக நடித்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் இது போன்ற போலி நபர்கள் அதிகாரிகள் எனக்கூறி சோதனை செய்ய முற்படும் போது சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்மாறு வியாபாரிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News