உள்ளூர் செய்திகள்

சாலையோர பள்ளத்தில் பைக் விழுந்து கொழுந்து விட்டு எரியும் காட்சி. 

மது போதையில் பைக் சாகசம் செய்தவர் தீ விபத்தில் சிக்கி படுகாயம்

Published On 2023-07-10 14:55 IST   |   Update On 2023-07-10 14:55:00 IST
  • ஆறுமுகம் ( வயது 40). கட்டிடத் தொழிலாளியான இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணிகளை செய்து வருகிறார்.
  • மது அருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மொரசபட்டி கிராமம், வெள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் ஆறுமுகம் ( வயது 40). கட்டிடத் தொழிலாளியான இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணிகளை செய்து வருகிறார்.

மது அருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மது போதையில் இருந்த ஆறுமுகம் திருச்செங்கோட்டில் இருந்து மொரசப்பட்டி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது எடப்பாடி அடுத்த கள்ளுகடை பகுதியில் சினிமாவில் வருவதைப் போல் மின்னல் வேகத்தில் டயரில் புகை பறக்க இருசக்கர வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஓட்டி வந்த பைக் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இருசக்கர வானத்தில் இருந்த பெட்ரோல் முழுவதும் சிந்தி தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிய நிலையில், ஆறுமுகத்தின் மீதும் தீப்பற்றி எரிந்தது.

அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பூலாம்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய ஆறுமுகத்தை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த தீக்காயம் அடைந்த ஆறுமுகம், முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் தீ விபத்தில் சிக்கிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News