உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே நாளை நடைபெற இருந்த எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

Published On 2023-06-24 07:50 GMT   |   Update On 2023-06-24 07:50 GMT
  • அ.தி.மு.க சார்பில் பல்வேறு கட்சியினர் இணையும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
  • அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் அ.தி.மு.க கூட்டத்திற்கு அனுமதி தர முடியாது என அறிவித்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த அமரகுந்தி மாரியம்மன் கோவில் திடலில், நாளை அ.தி.மு.க சார்பில் பல்வேறு கட்சியினர் இணையும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேச இருந்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தாரமங்கலம் அ.தி.மு.க நிர்வாகிகள் செய்து வந்த நிலையில், கூட்டம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தனர்.

வழிபாட்டு தலங்களில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தடை இருக்கிறது. அதனால் கூட்டத்திற்கான அனுமதி தொடர்பாக, அமரகுந்தி மாரியம்மன் கோவில் தக்காரும், செயல் அலுவலருமான சசிகலா ஆய்வு நடத்தினர்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் அ.தி.மு.க கூட்டத்திற்கு அனுமதி தர முடியாது என அறிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல்துறை சார்பில் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியனும் கூட்டம் நடக்கும் இடம், இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்றும் அதற்குரிய அனுமதி பெறவில்லை என்பதால் காவல்துறை தரப்பிலும் அனுமதி இல்லை என அறிவித்தார்.

மேலும் மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு உரிய அனுமதியை பெற்று கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News