மறியல் செய்த பொதுமக்களிடம் அருள் எம்.எல்.ஏ., சமரசம் செய்த காட்சி.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
- பெரிய புதூர் பாறை வட்டம் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இந்த பகுதியில் சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதி கேட்டு அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட பெரிய புதூர் பாறை வட்டம் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதி கேட்டு அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனாலும் அவர்களது கோரிக்கை இது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கு மேற்பட்டோர் சாரதா கல்லூரி சாலையில் திரண்டனர். பின்னர் மறியலுக்கு முயன்றனர். தகவல் அறிந்த அருள் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்றார். பின்னர் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டார். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். தொடர்ந்து அருள் எம்.எல்.ஏ. பாறைவட்டம் பகுதியில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சாரதா கல்லூரி அருகில் இருந்து பாறை வட்டம் பகுதி வரை ரூ.3.80 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் மறியலுக்கு முயன்று உள்ளனர்.
மேலும் 3 மாதத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். அப்படி அமைத்து தராவிட்டால் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அங்கு வந்த அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமா ராணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.