உள்ளூர் செய்திகள்

மோசடி வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகுகூட்டுறவு வங்கி ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

Published On 2023-07-09 08:34 GMT   |   Update On 2023-07-09 08:34 GMT
  • மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
  • இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது வங்கியில் நடந்த கூட்டுறவு வாரவிழா பதிவேடுகளை தணிக்கை செய்தபோது, ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 713 முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் வங்கி மேலாளர் ராமமூர்த்தி, வங்கி உதவி மேலாளர் ராமசாமி, முதுநிலை உதவியாளர் பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.

இந்த விசாரணையின் போது, கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 3 பேரையும் விடுவித்து 2013-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸ் தரப்பில் 2014-ம் ஆண்டு மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

5 ஆண்டுகள் சிறை

இதனிடையே வழக்கு தொடர்புடைய ராமமூர்த்தி, ராமசாமி ஆகியோர் அடுத்தடுத்து திடீரென இறந்து விட்டனர். இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை மாஜிஸ்திரேட்டு கேட்டதால் அதனை இன்ஸ்பெக்டர் சித்ராதேவி கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெருமாளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ஜெகநாதன் உத்தரவிட்டார்.

கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News