உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் ரூ.5 கோடி மோசடி; ஒருவர் கைது

Published On 2023-04-14 10:00 GMT   |   Update On 2023-04-14 10:00 GMT
  • 15 நாள் நீதிமன்ற காவலில் தேவேந்திரனை வைக்க உத்தரவிட்டார்.
  • முக்கிய குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரை சேர்ந்தவர் பழனியப்பன் (81) .

இவர் தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அடகு கடை வைத்து நடத்தி வந்தார்.

கடையில் வேலை பார்க்க துணையாக தனது மகன் தேவேந்திரனை (51) நியமித்தார்.

தந்தையும், மகனும் சேர்ந்து அடகு கடை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த அடகு கடையில்

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடாக சிறுசேமிப்பு மூலம் பெற்றனர் . ஆனால் குறிப்பிட்ட காலம் கழித்து பொதுமக்களுக்கு முதிர்வு தொகை ஏதும் தரவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேவேந்திரனிடம் பணத்தைக் கேட்டு நெருக்கடி செய்தனர்.

இந்த நிலையில் திடீரென அடகு கடையை பூட்டிவிட்டு 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பான வழக்கு மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்தனர்.

இந் நிலையில் இந்த வழக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீஸ்காரர்கள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் பழனியப்பன், தேவேந்திரனை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர்.

ஆனால் பழனியப்பன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் என போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தேவேந்திரனை தேடி வந்தனர்.

அப்போது அவர் சென்னையில் மாத சம்பளத்திற்கு லாரி ஓட்டி வந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் அவரை தொடர்ந்து கண்காணித்த போது அவர் தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதிக்கு ரகசியமாக வந்து சென்றதை போலீசார் அறிந்தனர்.

இதை தொடர்ந்து தேவேந்திரனை சுற்றி வளைத்து பிடித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு பாதுகாப்பு முதலீட்டாளர்கள் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் தேவேந்திரனை வைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் தேவேந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News