உள்ளூர் செய்திகள்

அரிசிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக்கோரிய வழக்கு- சிறப்பு அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-06-06 09:13 GMT   |   Update On 2023-06-06 09:13 GMT
  • மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
  • அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

மதுரை:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது.

ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிசிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரிசிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது.

சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிசிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆகவே யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.

அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, "சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது. தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை தற்போது பிடித்துள்ளது.

யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. யானைகள்-காடுகள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தர விடுகிறோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News