மாமரங்களில் பூச்சி தாக்குதல் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
- மாமரங்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
- வருகிற 11-ந் தேதி, மாவிவசாயிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் மாமரங்களில் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சித் தாக்குதல் தடுத்து, இழப்பீடு வழங்கிட வேண்டும் என மா விவசாயிகள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் வலியுறுத்தினர்.
அப்போது, பூச்சித் தாக்குதல் ஏற்பட்ட மாங்காய்கள் கலெக்டரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக மாஆராய்ச்சியாளர்கள் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள், விவசாயிகளுடன் சிறப்பு மா ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிலையில், காவேரிப்பட்டணம், பர்கூர் மற்றும் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாந்தோட்டங்களில் பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி உரம் மற்றும் மருந்துகள் தரக்கட்டுபாடு அலுவலர் அறிவழகன் தலைமையில் ஜீனூர் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்ரீவித்யா, திலகம், பையூர் ஆராய்ச்சி மண்டல தலைவர் சிவக்குமார், கேவிகே ஆராய்ச்சி மண்டல தலைவர் சுந்தரராஜன், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறையை சேர்ந்த சரவணன், சித்ரா மற்றும் அலுவலர்கள் மாமரங்களில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான பூக்கள், காய்களை சேகரித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மாமரங்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கையை கலெக்டரிடம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். வருகிற 11-ந் தேதி, மாவிவசாயிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
நிகழாண்டில் பூச்சித் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும். மாமுத்தரப்பு கூட்டமும் விரைந்து நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.