உள்ளூர் செய்திகள்

காரமடையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்

Published On 2023-06-06 09:08 GMT   |   Update On 2023-06-06 09:08 GMT
  • 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன.
  • விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி நகராட்சி எல்லைப் பகுதியில் விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்க சட்டம் உள்ளது.

மேலும் விளம்பர பலகைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் மற்றும் விளம்பர உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே காரமடை நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. அரசு, தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News