கோப்பு படம்
தேனி மாவட்டத்தில் சாரல் மழை வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
- மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் வேகமாக சரிந்து வந்தது.
- கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் பனிப்பொழிவை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவியது. மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் வேகமாக சரிந்து வந்தது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
எனவே மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் உள்படபல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 54.49 அடியாக உள்ளது. அணைக்கு 258 கனஅடிநீர் வருகிறது. நேற்று வரை 769 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 467 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.25 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. 65 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 44.93 அடியாக உள்ளது. 16 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.