மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது குறித்து பள்ளியில் அதிகாரி ஆய்வு
- கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத அவலம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த சூரை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 200 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்த போது 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு (மதிய உணவு) வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் 9,10ம் வகுப்புகள் தொடங்கப் பட்டன. ஆனால் அந்த மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட வில்லை.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்பாண்டி, பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் 10 ஆண்டுகளாக மாணவ - மாணவிகளுக்கு மதிய உணவு வழங் காததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.