மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
- மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது
- 127 பேர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலம் மற்றும் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், பள்ளிக்கல்வி துறை உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மொத்தம் 127 பேர் கலந்துகொண்டனர். இதில் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை 79 பேருக்கு வழங்கப்பட்டது.
மேலும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கோரி 57 பேரும், மருத்துவ காப்பீடுக்கோரி 36 பேரும், பராமரிப்பு நிதியுதவி வழங்கக்கோரி 35 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கக்கோரி 17 பேரும் பதிவு செய்தனர்.
இதில் வட்டார கல்வி அலுவலர் பவானந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த், மேற்பார்வையாளர் அப்பாஸ் அலி, ஆசிரியர் பயிற்றுனர்கள் நிஷாந்த், ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.