உள்ளூர் செய்திகள்

வேலூரில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. சத்துவாச்சாரியில் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற காட்சி.

மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2022-11-23 09:33 GMT   |   Update On 2022-11-23 09:33 GMT
  • 24 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை
  • ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விட விவசாயிகள் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது.பின்னர் மேக மூட்டத்துடன் மந்தமான தட்பவெப்ப நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக சாரல் மழை பெய்தது.

மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகளின் காரணமாக சீரமைக்கப்படாத தெருக்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

அதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது‌ மேகம் மந்தமாக காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. 12 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளது. 24 ஏரிகளுக்கு நீர்வரத்து கொஞ்சம் கூட இல்லை. மற்ற ஏரிகளில் 20 முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. அங்கு 4 ஏரிகளுக்கு மட்டும் தான் நீர்வரத்து இல்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 145 ஏரிகளில் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 30 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை.

பாலாற்றில் ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

பாலாறு கவுண்டன்யா ஆறு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை பரவலாக சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை காரணமாக இன்று காலை பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் நனைந்தபடி சென்றனர்.

Tags:    

Similar News