உள்ளூர் செய்திகள்

சாலையில் மாடுகள் தொல்லை

Published On 2023-08-03 14:42 IST   |   Update On 2023-08-03 14:42:00 IST
  • கூட்டமாக சுற்றி திரிவதால் போக்குவரத்து நெரிசல்
  • முதியவர்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்

ராணிப்பேட்டை:

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வரலாற்று பின்புலத்துடன் தொழில் நகரமாகவும், அன்னிய செலவாணியை ஈட்டி தரும் நகரமாகவும் விளங்கியது ராணிப்பேட்டை நகரம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ராணிப்பேட்டை நகரம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டு மாவட்டத்தின் தலைநகர் என்ற அந்தஸ்தையும் பெற்றது.

மாவட்டத்தின் தலைநகரான பின்னர் ராணிப்பேட்டையிலேயே கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுடன் நகர உள்கட்டமைப்பு வசதிகளிலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது.

இவ்வாறு வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்களை சந்தித்திருந்த போதிலும் மாறாத சில நிகழ்வுகளும் தினந்தோறும் நடந்து, இதை மாற்றவே முடியாதா என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ராணிப்பேட்டை பழைய பஸ் நிறுத்தம், உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது பல ஆண்டுகளாக மாறாமல் தொடர்ந்து வருகிறது.

காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த இடத்தில் மாடுகள் சுற்றுகின்றன. குறிப்பாக மாலை நேரத்தில் அதிக அளவில் மாடுகள் சுற்றுகின்றன.

இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோர்க்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

சாலையில் கூட்டமாக நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது.

இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.

சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்க நகராட்சி சார்பில் அறிவிப்பு செய்வதும் , மாடுகளை பிடிப்பது பின்னர் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து மாடுகளை விட்டு விடுவது என தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையோரங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த நடவடிக்கை எப்போது தொடங்கும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News