தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்
மு.க.ஸ்டாலின் 20-ந் தேதி ராணிப்பேட்டை வருகை
- 25 ஆயிரம் பயனாளிகளுக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
- முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு.
ராணிப்பேட்டை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ஆம் தேதி (திங்கட்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டம்க ன்னிகாபுரத்தில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார்.கடந்த 27-ந் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் வாலாஜா, ஆற்காடு, திமிரி, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய 7 ஒன்றியங்களில் பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
அதில் தகுதியுள்ள மனுக்களுக்கு தமிழக முதல்வர் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு 100 சதவீதம் தீர்வு காணப்பட வேண்டும்.ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முடிவற்ற பணிகள், அடிக்கல் நாட்டப்பட்ட உள்ள பணிகளில் விவரங்களை விரைந்து தயார் செய்து வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள் நுழையும் வழி, வெளியில் செல்லும் வழி ஆகியவற்றிற்கு வரைபடம் தயாரித்து வழங்கப்பட வேண்டும்.பயனாளிகளை அழைத்து வந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைத்து கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இவர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் பேருந்து ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை -உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத் துறை, கூட்டுறவுத் துறை, தொழிலாளர் நலத் துறை, வனத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, வேலைவாய்ப்புத் துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் வழங்கப்படும் பயனாளிகளின் விவரங்களை வருகிற 10ஆம் தேதிக்குள் தயார் செய்து கொடுக்க வேண்டும்.ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை ஆட்சியர் அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து வர பெற்றுள்ள விண்ணப்பங்களில் நடவடிக்கைகளை தினமும் கண்காணிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து 100 சதவீதம் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை உயர் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.