பனை விதைகள் சேகரித்த காட்சி.
- 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்
- இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
நெமிலி:
ராணிப்பேட்டையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாணாவரம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த பகுதியில் ஏராளமான பனை மரங்கள் நடவு செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை பெருக்கினால் நீர் வளமும் பெருகும் எனவே பனைமரத்தை அதிகமாக பெருக்கிட அந்தந்த ஊராட்சிகளில் உள்ள 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பனை விதைகளை சேகரித்து அந்தந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை கால்வாய் ஓரம் பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு வேண்டுகோளின்படி பாணாவரம் அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் அந்த பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி 10 ஆயிரம் பனை விதைகளை சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் குத்தம்பாக்கம் ஊராட்சிக்கு பனை விதைகளை நடவு செய்து மீதமுள்ள விதைகளை மற்ற ஊராட்சிக்கு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.