வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கல்வி சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர், உறுப்பினர்கள், அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்ட போது எடுத்த படம்.
வாலாஜா அரசு மருத்துவமனையில் சட்டமன்ற குழு ஆய்வு
- மின்தடை நேரத்திலும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட அறிவுறுத்தல்
- நிலுவை பணிகள் குறித்து கேட்டறிந்தனர்
வாலாஜா:
வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடு சட்டபேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் தணிக்கைத் துறை தலைவரால் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நிலுவை பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதன்படி இந்த ஆய்வில் வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவினை ஆய்வு செய்தனர்.அப்போது நீரிழிவு, கர்ப்பப்பை நோய்கள், மலட்டுத்தன்மை, நாள்பட்ட தோல் நோய்கள், மூட்டு வலி, மூலம் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கருவுற்ற தாய்மார்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு உள்ள நபர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு மூலிகை பற்றிய பயன்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கப்படுகிறது என சித்த மருத்துவர் பொது கணக்கு குழுவினருக்கு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நேரடியாக சென்று நோயாளிகளிடம் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான குழு கேட்டறிந்தனர். அப்போது மருத்துவமனையில் மின்தடையின் போது தானாக ஜெனரேட்டர் இயங்கும் வகையில் இல்லாததை பார்த்து அவசர சிகிச்சை நோயாளிகள் இந்நேரங்களில் பிரச்சனைக்குள்ளாக மாட்டார்களா என கேள்வி எழுப்பினர்.
மின்சாரம் இல்லாத நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் எந்த ஒரு மானிடரும், விளக்குகளும் வேலை செய்யவில்லை. இந்த சூழல் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாகும். நோயாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவத்துறை செயலாளரை அழைத்து விசாரிக்க உள்ளோம்.
எவ்வாறு தடையில்லா சான்று அளித்தார்கள்.இந்த ஏற்பாட்டினை சரியாக செய்திடாத பொதுப்பணித்துறை செயலாளரையும் அழைத்து விசாரிக்க உள்ளோம் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
இந்த குறையை உடனடியாக சரி செய்திட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குகுழு உறுப்பினர்களான காட்டுமன்னார் கோயில் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், பாபநாசம் எம்.எல்.ஏ. முனைவர் ஜவாஹிருல்லா, ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சோளிங்கர் எம்.எல்.ஏ. ஏ.எம். முனிரத்தினம், இணை செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி உள்பட பலருடன் இருந்தனர்.