கோப்புபடம்
அரக்கோணம் - வேலூர் ரெயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கம்
- பயணிகள் ரெயில் எக்ஸ்பிரஸாக மாற்றம்
- டிக்கெட் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி
அரக்கோணம் :
அரக்கோணம் காட்பாடி வேலூர் கண்டோன்மென்ட் இடையே இக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரெயில்கள் கொரோனா காரணமாக கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த ரெயில்கள் தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயிலாக இன்று முதல் இயக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் நிலையத்திற்கு வந்தடையும். அதேபோல் வேலூர் கண்ட்ரோன்மென்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
மதியம் 2. 5 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 4. 35 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும் .
அதேபோல வேலூர் கண்ட்ரோன்மெண்ட் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7. 15 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு காட்பாடி சென்றடையும். இதே போல காட்பாடியில் இருந்து காலை 4.25 புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.5 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசஞ்சர் ரெயில்களாக இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில்கள் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரெயில்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு பாசஞ்சர் ரெயிலில் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில் என பெயர் மாற்றப்பட்டுள்ளதால் இந்த ரெயிலில் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ெரயில்கள் மீண்டும் ரெயில் இயக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வால் அவதியடைந்துள்ளனர். மீண்டும் பழைய கட்டணத்திலேயே ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.