தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசம்
- ரூ.3 லட்சம் சாம்பலானது
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி ஏரிக்கரை புதூர் என்ற பகுதியில் சுமார் 10- க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது. இங்கு வசிக்கும் விசாலாட்சி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரின் குடிசை வீடுகளும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள், வீட்டு உபயோக பொருட்கள், உடைமைகள், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி நாசமானது.
இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா?, அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? என வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.