உள்ளூர் செய்திகள்

3 சதவீத அக விலைப்படி உயர்வுக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

Published On 2022-08-18 08:24 GMT   |   Update On 2022-08-18 08:24 GMT
  • 3 சதவீத அக விலைப்படி உயர்வுக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
  • 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளதாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

75-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான 3 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் அரசுத் துறைகளில் பணிபுரியும் 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார்.

கொரோனா காலங்களில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக விலைப்படி உயர்வை சென்ற ஆண்டு 11 சதவீதம் மட்டுமே உயர்த்தி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி ஆசிரியர், அரசு ஊழியர்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

அது மட்டுமில்லாமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதியை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து பழிவாங்கல் நடவடிக்கையும் ரத்து செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

மேலும் கடந்த 1-ந்தேதி தலைமை செயலகத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பேரமைப்பான ஜாக்டோ- ஜியோவின் நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர், உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

அவர் உறுதியளித்தபடி ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையான 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

விரைவில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் வழங்குவார் என்று நம்புகிறோம். விரைவில் நடைபெற இருக்கும் ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் கலந்து கொண்டு ஆசிரியர், அரசு ஊழியர்களின் மேலும் சில கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பார் என்றும், சில கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்ற உறுதியையும் மாநாட்டில் தருவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News