உள்ளூர் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது குறித்த கருத்தரங்கம்

Published On 2023-05-14 13:52 IST   |   Update On 2023-05-14 13:52:00 IST
  • ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது குறித்த கருத்தரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றார்.
  • மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்த லுக்கு இணங்க கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது தொடர்பான கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் நடத்தியது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது:-

மகளிர் சுய உதவி குழு கடன்கள் அதிகம் வழங்கப்படுவதன் மூலம் மாவட்டத்தில் பண சுழற்சி அதிகம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 100-க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் உருவாக்கப் படவும், இந்த நிதியாண்டில் ரூ.300 கோடிக்கும் மேலாக மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கவும் உறுதி பூண்டு துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் செயல்பட வேண்டும்.

மேலும் மே 15 முதல் ஜூன் 30 வரை மாவட்டத்தில் உள்ள 131 வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் சங்கத்தின் விவகார எல்லையில் உள்ள அனைத்து மகளிரும் உறுப்பினராகி, கடன் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், கூட்டுறவுத்துறை மற்றும் மத்திய வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர். சிறந்து விளங்கிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News