உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி.

பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Published On 2022-11-12 07:32 GMT   |   Update On 2022-11-12 07:32 GMT
  • கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே கிருஷ்ண புரத்தைச் சேர்ந்தவர் சிவனா பிள்ளை. இவர் கீழக்கரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39).

இவர் 8 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

இதையடுத்து காளீஸ்வரி கீழக்கரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன், எலும்பு சிகிச்சை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இவரை பரிசோதனை செய்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காளீஸ்வரிக்கு செயற்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிரகாஷ் தலைமையில் கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் மருத்துவர் உமா சங்கரி, செவிலியர் ஆனந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளீஸ்வரி கூறுகையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அரசுமருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டனர்.

இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயற்கை மாற்று எலும்பு அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News