உள்ளூர் செய்திகள்

வறண்டு கிடக்கும் கண்மாய்.

வறண்டு கிடக்கும் கண்மாய்-ஊரணிகள்

Published On 2022-12-09 07:43 GMT   |   Update On 2022-12-09 07:43 GMT
  • அபிராமம் பகுதியில் கண்மாய்-ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன.
  • இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பருவமழை பொய்த்ததாலும், வைகை ஆற்று தண்ணீர் இந்த பகுதிக்கு வராததாலும் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், வல்லக்குளம், பொட்டகுளம், பாப்பனம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவமழையை நம்பி நெல், மிளகாய், பருத்தி, உளுந்து உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் வறண்டு காணப்படுகிறது. வைகையாறு, கிருதுமால் நதி, பரளையாறு கால்வாய்களும் மண் மேடாகவும், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படுகிறது.

இதனால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தற்போது அபிராமம் பகுதியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும் பருவமழை நேரத்தில் கண்மாய், ஊரணிகளில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதுடன், குடிநீர் பற்றாக்குறையையும் போக்கும்.

தற்போது தண்ணீர் நிரம்பாததால் கண்மாய், ஊரணிகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக கோடை காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News