24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அபிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பகல் நேரங்களில் மட்டும் டாக்டர்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப் படுகின்றனர்.
அபிராமம் மற்றும் நத்தம், பாப்பனம், விரதக் குளம், அச்சங்குளம் டி.வல்லகுளம் காடனேரி உள்பட்ட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவதற்காக நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமுதிக்கோ, 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடிக்கோ செல்லும் அவலநிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-
அபிராமத்தை சுற்றி கிராமங்கள் அதிகமாக உள்ளன. நத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பிரசவம், காய்ச்சல், இரவு நேரங்களில் பூச்சி, பாம்பு, போன்ற விஷ ஜந்துகள் கடிபட்டு அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது டாக்டர்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நோயாளிகளை கமுதிக்கோ, பரமக்குடிக்கோ, மதுரைக்கோ கொண்டு செல்லும்போது உயிர் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அவசர விபத்து சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள், பாம்பு கடி போன்ற விஷ ஜந்துகள் கடிக்கு தேவையான மருந்துகள் இங்கு இல்லாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனை தடுத்த நிறுத்து வதுடன் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு நிரந்தரமாக 24 மணி நேரமும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.