ஈரோட்டில் அட்டை பெட்டியில் கடத்திய 4 அடி நீள மண்ணுளி பாம்பு
- ஈரோடு-சேலம் ரெயில் வழித்தடத்தில் கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டி ஒன்றை கண்டறிந்தனர்.
- மண்ணுளி பாம்பை போலீசார் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ரெயில்வே சந்திப்பு, நடைமேடை, ரெயில் மெதுவாக செல்லும் வழித்தடங்களில் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ஈரோடு-சேலம் ரெயில் வழித்தடத்தில் கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டி ஒன்றை கண்டறிந்தனர். அதை போலீசார் மீட்டு சோதனை செய்தனர். அப்போது அதில் 3 கிலோ எடையுள்ள 4 அடி நீள மண்ணுளி பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரெயிலில் வந்தவர்கள் யாரோ இந்த மண்ணுளி பாம்பை கடத்தி வந்திருக்கலாம் என்றும், போலீசாரின் சோதனையில் சிக்காமல் இருப்பதற்காக இந்த மண்ணுளி பாம்பை அவர்கள் வீசி சென்றிருக்கலாம் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பை போலீசார் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.