பொன்னமராவதி பெண்ணின்நேர்மையை பாராட்டிய போலீசார்
பொன்னமராவதி,
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சி காடம்பட்டியை சேர்ந்தவர் கோகிலா.
கூலித்தொழிலாளியான இவர் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.43,500 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பொன்னமராவதி சென்றுள்ளார்.
அப்போது ஏனாதி அருகே இரு சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்த கூடை தவறி சாலையில் விழுந்துள்ளது. இதைக்கவனிக்காத கோகிலா பொன்னமராவதி சென்று பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அமுதா என்பவர் பணி முடித்து அச்சாலையில் வந்த போது சாலையில் கிடந்த பணம் உள்ள கூடையை எடுத்து வந்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து கூடையில் இருந்த ரசீது மூலம் உரியவரை கண்டறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கோகிலாவிடம் பணத்தை ஒப்படைத்தார்.
மேலும் சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அமுதாவின் நேர்மையை பாராட்டி போலீசார் கௌரவித்தனர்.