போராட்டத்தை கைவிட்ட நூற்பாலை ஒப்பந்த தொழிலாளர்கள்
- நூற்பாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்
- அதிகாரிகளின் பேச்சுவார்தையில் சமரசம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இவ்வாலையில் நிரந்தர பணியாளர்கள் 72 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 300க்கு மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர். ஆலையிலிருந்து மாதந்தோறும் சுமார் 200 டன் நூல் நூற்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் ஆலை நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிர்வாகத்தினர், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நாள் ஊதியம் ரூ 420 ஐ பாதியாக குறைத்து வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் நாள் ஊதியம் போன்று அல்லாமல் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று வேலையை நிறுத்திவிட்டு ஆலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ஏற்கனவே பழைய முறைப்படி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்,ஆலை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் தொழிலாளர்க ளோடு பேச்சுவார்த்தை நடத்தி உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும் வரை மீண்டும் பழைய முறையே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.