நகல் மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல் வழியில் வழங்கும் திட்டம்
- புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று சேரும்
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், 'நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு அஞ்சல் வழியில் வழங்கும் திட்டத்தின்கீழ், கலெக்டர் கவிதா ராமு, தலைமை தபால் நிலைய அலுவலர் லலிதாவிடம் வழங்கினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில், உணவுப் பொருள் வழங்கல் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது 'அஞ்சல்வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்" என்ற அறிக்கையினை வெளியிட்டார்.அதன்படி இந்திய அஞ்சல் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நகல் குடும்ப அட்டையினை ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துள்ள நகல் குடும்ப அட்டையினை இந்திய அஞ்சல் துறை வாயிலாக அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்புவதற்கு உரிய மென்பொருள் வசதிகள் செய்யப்பட்டு, இத்திட்டமானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டத்தில் ஆன்லைன் முறையில் ரூ.45- அரசுக்கணக்கில் செலுத்திய 472 குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டையினை இந்திய அஞ்சல் துறை வாயிலாக குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், வழங்கல் அலுவலர் கணேசன், விற்பனை அலுவலர் நாகநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.