உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே மஞ்சுவிரட்டு

Published On 2023-05-15 14:28 IST   |   Update On 2023-05-15 14:28:00 IST
  • ஆலங்குடி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது
  • ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் பிடாரியம்மன், சித்திவிநாயகர், முத்துமுனீஸ்வரர், உருமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சித்தி விநாயகர் திடலில் நேற்று நடந்தது. கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி உறுதிமொழி வாசிக்க அதனை வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். முத்துராஜா எம்.எல்.ஏ., கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், துணை தாசில்தார் செல்வராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 காளைகள் கலந்து கொண்டன. 11 சுற்றுகளாக நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 99 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், வெள்ளி நாணயம், மின்விசிறி, சில்வர் அண்டா, குக்கர், ஹாட் பாக்ஸ், மின்சார அடுப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



Tags:    

Similar News