உள்ளூர் செய்திகள்

தந்தை வாங்கிய ரூ.50 ஆயிரத்திற்கு சிறுமி கடத்தல்

Published On 2023-07-01 12:42 IST   |   Update On 2023-07-01 12:42:00 IST
  • தந்தை வாங்கிய ரூ.50 ஆயிரத்திற்கு சிறுமி கடத்தப்பட்டார்
  • நிதிநிறுவன ஊழியர் கைது செய்யபட்டார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இயங்கி வரும் பிரபல நிதி நிறுவனத்தில் மருதூரை சேர்ந்த கூலித்தொழிலாளி வனத்து ராஜா (வயது 32) என்பவர் மாதாந்திர தவணையில் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் தவணைத்தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் பெரிய சூரியூரை சேர்ந்த தங்கம் மகன் விக்னேஷ் (27) என்பவர் பணம் வசூலிப்பதற்காக மருதூரில் உள்ள வனத்து ராஜா வீட்டுக்கு சென்று உள்ளார்.

அப்போது வனத்து ராஜா வேலைக்கு சென்றுள்ளதாக அவரது மகள் ஜனனி (11) கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு விக்னேஷ் தனது நிதி நிறுவனத்துக்கு சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்த வனத்து ராஜா, தனது மகளை காணாமல் தேடிய போது நிதிநிறுவன ஊழியர் அவரை அழைத்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கீரனூர் போலீசாரிடம் தனது மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.

இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் தலைமையிலான போலீசார் சிறுமியை கடத்தி வைத்திருந்த நிதி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி அங்கிருந்து சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். இதையடுத்து, சிறுமியை கடத்தி சென்ற விக்னேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடன் தொகையை செலுத்தாததால் தொழிலாளியின் மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்ற சம்பவம் கீரனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News