உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி விவசாயிக்கு நீதிபதிகள் பாராட்டு
- சமதள பகுதியில் மிளகு சாகுபடியில் சாதனை
- ஆலங்குடி விவசாயியை நீதிபதிகள் பாராட்டினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செந்தமிழ்செல்வன். இவர், குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே சாத்தியமாக இருந்து வந்த மிளகு பயிர்களை, சமதளப் பகுதியான சேந்தன்குடியில் பயிரிட்டு, அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். 4 ஏக்கரில் அமைந்துள்ள இந்த தோட்டத்தை அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழகத்தினர், ஜப்பான் பன்னாட்டு சூழலியல் ஆய்வு மையத்தின் ஆராய்சியாளர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, செந்தமிழ் செல்வத்தை பாராட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சந்தரேஷ், உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்டோர் சேந்தன் குடிக்கு வந்து மிளகு தோட்டத்தை பார்வையிட்டனர்.பராமரிப்பு மற்றும் மிளகு விற்பனை குறித்து விவசாயி செந்தமிழ் செல்வத்துடன் கலந்துரையாடினர். அப்போது, விவசாயத்தில் முன் மாதிரி முயற்சியில் ஈடுபட்டு சாதித்துள்ளதாக விவசாயி செந்தமிழ் செல்வத்தை நீதிபதிகள் பாராட்டினர். மேலும், செந்தமிழ்செல்வனின் தோட்டத்தில் விளைந்த மிளகை ருசித்துப் பார்த்த நீதிபதிகள் கடுமையான காரமாக இருப்பதாகவும், தாங்கள் இதுவரை சமதளப் பகுதிகளில் மிளகு சாகுபடி சாத்தியமில்லை என்றே அறிந்திருக்கிறோம். நேரில் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது என்று தெரிவித்தனர். பின்னர், செந்தமிழ்செல்வனின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நீதிபதிகளுக்கு, விவசாயியின் குடும்பத்தினர் கருமிளகு மற்றும் வெள்ளை மிளகுகளை பரிசாக வழங்கினர்.