போர்க்கால அடிப்படையில் கல்லணை கால்வாய் கடைமடை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
- போர்க்கால அடிப்படையில் கல்லணை கால்வாய் கடைமடை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை வைத்தனர்
- கல்லணை கால்வாய்கடைமடை பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய்யபட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஜுன் மாதத்திற்கு பிறகு நெற்பயிர் சாகுபடி தொடங்கப்பட்டு தற்போது நெற்பயிர் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அறுவடை செய்த நெல் மணிகளை சேமித்து வைக்க போதிய இடம் இல்லாததால், அந்தந்த பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், கல்லணை கால்வாய்கடைமடை பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய்யபட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. சித்தகன்னி, கூகனூர், கொடிவயல், களக்குடி ,கண்டிச்சங்காடு, அத்தானி, குடிக்காடு, இடையாத்திமங்களம், சிங்கவனம், காரக்கோட்டை, நிலையூர், தினையாகுடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் அறுவடையை தொடங்கியுள்ளனர். எனவே மேற்கூறிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் விரைந்து அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.