கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க புதுக்கோட்டை கலெக்டர் அறிவுறுத்தல்
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க புதுக்கோட்டை கலெக்டர் அறிவுறுத்தினார்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவிட் சிகிச்சைக்குத் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும் கோவிட் பாதிப்பு அதிகம் தென்படும் நாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைத்தரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கோவிட் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யவும், பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரை அவர்களை தொடர்ந்து கண்காணித்திடவும் கலெக்டர் கவிதா ராமு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வட்டார அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தேவையான இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிடவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்திடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கவிதா ராமு ஆலோசனை நடத்தி மேற்கொண்டார். எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றவும், கைகளை சோப்புப் போட்டு கழுவவும், முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, ஊரக நலப்பணி இணை இயக்குநர் ராமு, சுகாதாரப்பணி துணை இயக்குநர் இராம்கணேஷ், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.