உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் நண்பரை கொலை செய்த முதியவர் கைது.

Published On 2023-07-13 12:51 IST   |   Update On 2023-07-13 12:51:00 IST
  • புதுக்கோட்டையில் நண்பரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
  • கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை நரிமேடு லட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பின் புதுக்கோட்டை வந்த அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மனைவி பிரிந்து சென்ற நிலையில் விஜயராகவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகா்ணம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், விஜயராகவனை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்தை (60) போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், விசாரணையில், அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும், ஒன்றாக சேர்ந்து மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விஜயராகவன் குடிபோதையில் சோமசுந்தரம் வீட்டு வாசல் முன்பு நின்று தகராறில் ஈடுபட்டதால் கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்ததாக சோமசுந்தரம் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து சோமசுந்தரத்தை போலீசார் நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News