உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2022-07-15 14:54 IST   |   Update On 2022-07-15 14:54:00 IST
  • மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது
  • மணல் குவாரி அமைத்து தரக்கோரி நடந்தது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 1800க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஆற்றுப்படுகை, ஏரி, குளங்கள் போன்ற பகுதிகளிலிருந்து மண் மற்றும் மணல் எடுத்து, அதனை கிராம புறங்களில் சின்னச்சின்ன வீடுகள் கட்டுவதற்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கென அந்தந்த பகுதிகளில் மணல் குவாரி அமைத்து பொதுப்பணித்துறை சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டி மணல் குவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

எனவே மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் அந்தந்த பகுதிகளில் மணல்குவாரி அமைத்திட வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார். அப்போது மணல் குவாரி அமைத்துதர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் சொர்ணாராஜ், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மாட்டு வண்டிக்கென மணல் குவாரி அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

கோட்டாட்சியரின் உறுதியளிப்பை தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேசன் உள்ளிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News