வைரிவயல் கண்மாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார கோரிக்கை
- வைரிவயல் கண்மாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது,
புதுக்கோட்டை:
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரும், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி.ஆர். பாண்டியன் அறந்தாங்கியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அறந்தாங்கி அருகே வைரிவயல் கண்மாயில் கழிவு நீர் கலந்து குப்பைத்தொட்டியாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளை பலமுறை தொடர் கொண்டும் பயன் இல்லை, எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு போர் கால அடிப்படையில் கண்மாயை தூர்வாரி விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய வழிவகுக்க வேண்டும், இல்லையெனில் தனது தலைமையில் அறந்தாங்கி நகராட்சி முன்பு மிகப் பெரிய போராட்டம் நடைபெறும்.
இதே போன்று தமிழகம் முழுவதும் நகர்புறங்கள் அருகே உள்ள கிராம நீர் நிலைகளில் கழிவு நீர் கலந்து கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை உருவாகி வருகிறது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை எதிர்பார்த்து க்கொண்டிருக்கின்ற வேளையில், கடந்த 5 ஆண்டுகளில் ஆறுகள் வழியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது,
இதனை அரசு ஆறுகளை இணைப்பதன் மூலம் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீரை திரும்பி விடலாம் என்றார். மேலும் பெங்களூருவில் தற்போது வரலாறு காணாத பேய்மழை பெய்துள்ளது. இங்கு பெய்த மழை நீர் தென்பெண்ணை வழியாக கடலில் சென்று கலக்கிறது. எனவே தெண்பெண்ணை பகுதி மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பேட்டியின்போது விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் உடனிருந்தனர்.