உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் 50 படுக்கை வசதியுடன் ஆயுஷ் மருத்துவமனை தொடங்கப்படும் - முத்துராஜா எம்.எல்.ஏ. தகவல்

Published On 2022-10-30 14:42 IST   |   Update On 2022-10-30 14:42:00 IST
  • விரைவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை புதுக்கோட்டையில் அமைய உள்ளது.
  • ஒரே இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மருத்துவ பிரிவுகள் நவம்பர் 1 ம் தேதி முதல் பழைய மருத்துவ மனை வளாகத்தில் செயல்பட உள்ளது.

புதுக்கோட்டை,

மருத்துவ கடவுளாக வணங்கப்படும் தன்வந்திரி பிறந்த நாளான ஐப்பசி மாத திரியோதசி நட்சத்திரம் அன்று தேசிய ஆயுர்வேத தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டையில் மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இம் முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா கலந்துகொண்டு தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன், ஊரக நலத்துறை திட்ட அலுவலர் கருப்புசாமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர். சிவகாமி, ரோட்டரி கிளப் சார்பாக மண்டல செயலாளர் சிவாஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.

முகாமில் மாவட்ட சித்த மருத்துவர் மருத்துவர் எஸ்.காமராஜ் எழுதிய நாள்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவம் என்ற நூலை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வெளியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன் பெற்றுக்கொண்டார். முன்னதாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பேசுகையில், முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

மேலும் விரைவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை புதுக்கோட்டையில் அமைய இருப்பதாகவும், மேலும் ஒரே இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மருத்துவ பிரிவுகள் நவம்பர் 1 ம் தேதி முதல் பழைய மருத்துவ மனை வளாகத்தில் செயல்பட இருப்பதாகவும்,

உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க 20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன எனவும் , இம் மருத்துவ வசதிகளை புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் பேசினார். முகாமிற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் சுயமரியாதை, அமுதமீனா, சத்தியவாணி, ரஞ்சனி, ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

Similar News