61- நாள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு-உற்சாகத்துடன் கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மீனவர்கள்
- 61- நாள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவால் உற்சாகத்துடன் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
- வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து 520க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களை பொறுத்தவரையில் வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதும், வெள்ளிக்கிழமையில் விடுமுறையில் இருப்பதும் வழக்கம்.இந்நிலையில் கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக ஏப்ரல் மாதத்திலிருந்து ஜீன் மாதம் வரை தமிழக மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தை அனுசரித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி தடைக்காலத்திற்கு முன்பே 13ம் தேதி வெள்ளிக்கிழமையிலிருந்தே தடைக்காலத்தை அனுசரிக்க தொடங்கினர். அது முதல் கடந்த 2 மாதகாலமாக மீனவர்கள் தங்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் விசைப்படகுகளை பழுது பார்த்து தயார் நிலையில் வைத்தனர். இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் நேற்றோடு முடிவடைந்ததையடுத்து இன்று மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.